Tuesday, January 24, 2012

திருப்தியளித்த கிளிநொச்சிப் பயணம்



சுமார் ஆறேழு வருடங்களுக்கு பின்னர் தமிழரின் தலைநகரமென வர்ணிக்கப்பட்ட கிளிநொச்சி மண்ணுக்கு செல்லும் சந்தர்ப்பம் வாய்த்தது (வாய்த்தது என்பதை விட திணிக்கப்பட்டது எனலாம்) 2004 ஆம் ஆண்டு ஆழிபேரலையின் அழிவுகளிலிருந்து மீளும் முன்னரே 2008 /2009 காலகட்டத்தில் நடந்தேறிய இறுதிக்கட்ட யுத்த கோரத்தாண்டவத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு கிட்டத்தட்ட தன்னுடைய வரலாற்றுச்சிறப்புக்கள் அனைத்தையும் காவு கொடுத்த (இருக்கின்ற கொஞ்ச நஞ்ச தமிழர் வரலாற்று நினைவுசின்னங்களும் தெற்கிலிருந்து வரும் சுற்றுலாபயணிகளின் பார்வயிடங்களாக மாற்றப்பட்டு சிப்பாய்களின் நடுவே களையிழந்துபோய் நிற்கின்றன) மண்ணை சூரிய பகவான் தனது அனல் பார்வையினால் மேலும் வாட்டியெடுத்துக் கொண்டிருந்தார்.


அன்று மாலை 6 .30 மணிவரை தெரியாது இரவு 10 மணிக்கு வவுனியாவிற்கு இரயிலேற வேண்டுமென்று, உற்ற நண்பனொருவன் அழைத்து பிரயாணத்திற்கு வர இருந்த ஒருவர் இறுதி நிமிடத்தில் வரமுடியவில்லை நீ வரவேண்டும் என்று நிர்பந்திக்க சேர்ந்து இரண்டு கிழமைகளே ஆகியிருந்த வேலைக்கு தயக்கத்துடன் விடுமுறை சொல்லி ஒரு சமூக நோக்கத்திற்காக தானே செல்கிறோம்
என்ற எண்ணம் மேலிட, ஒரு ஏழு பேர் இரயிலேறி அடுத்தநாள் காலை வவுனியாவையடைந்து கூட வந்திருந்த நண்பனொருவரின் வீட்டில் காலைக்கடன்கள், உணவுகள் மற்றும் இத்யாதிகள் எல்லாம் முடித்துக்கொண்டு 8 மணியளவில் வானேறி (van ) கிளிநொச்சி நோக்கி புறப்பட்டோம், வழிநெடுகிலும் காணப்பட்ட காட்சிகள், சிப்பாய்கள், சின்னங்கள், விளம்பரங்கள் தொடர்பாக அவ்வப்போதான கதைகள், விவாதங்கள், கலாய்ப்புகளுடன் ஒரு 3 மணிநேரம் பயணம் தொடர்ந்தது, சென்ற பாதையின் வனப்பு மற்றும் வான் இருக்கையின் அமைப்பு பற்றி கூறுவதற்கு ஒன்றுமில்லை.


இந்த இடத்தில இப்பயணம் சாத்தியமடைந்தமைக்கான காரணிகளைப் பார்த்து விடுவோம், இலங்கையின் பல்கலைகழகமொன்றின் பழைய மாணவர் ஒருவரினது உள்ளத்தில் உதித்த எண்ணக்கருவிற்கு அவரினாலும் அவரைப்போல எண்ணலைகள் கொண்ட  நண்பர்களினாலும் வடிவமளிக்கப்பட்டு ஒரு சிறிய சமூகசேவை நோக்கம் கொண்ட அமைப்பொன்று உருவாக்கப்பட்டது, இதன் ஆரம்ப கட்டமாக வடக்கில் யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கபட்டு பிற சேவை நிறுவனங்களினாலும் சமூகத்தில் முக்கியபுள்ளிகளென தம்மை தாமே பறைசாற்றிக் கொள்ளும் தனிநபர்களினாலும் பாரமுகமாய் இருக்கின்ற பாடசாலைகளுள் ஒன்றினை தெரிவுசெய்து அங்கு காணப்படும் கற்றல், கற்பித்தல் தொடர்பான பிரச்சனைகளை தம்மால் முடிந்தவரை உடல் உழைப்பாலும் கிடைக்கும் நிதி முதல்களாலும் தீர்வுசெய்ய எண்ணி கொழும்பிலிருந்து திரட்டப்பட்ட சிறு தொகுதி கற்றல் உபகரண பொதிகளுடன் தம் முதற்கட்ட நடவடிக்கையினை தொடர்ந்தனர், இவர்களுடன் இணைந்து உயரிய ஒரு சேவையை எனது சமூகத்திற்கு செய்வதற்கு எனக்கும் சந்தர்ப்பம் வாய்த்தமை எண்ணி பெருமை கொள்கிறேன். (கடந்த ஞாயிறு பத்திரிகையில் ஒரு பத்தி வாசித்தேன் வடக்கில் கல்விகற்று பலகலைக்கழகம் தெரிவாகி வைத்தியராகி வெளியேறுவோர் தமது பிரதேசங்களுக்கு சென்று சேவை செய்வதற்க்கு பின்னிட்பதால் அங்குள்ள மக்கள் வைத்திய உதவி பெறுவதற்கு சொல்லொனாத் துயரங்களை அனுபவிப்பதாகவும் சிங்கள இளைஞர்களே அங்கு சென்று வைத்தியர்களாக இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது, பிறந்த மண்ணுக்கு செல்லவே பின்னிட்பவர்கள் மத்தியில் இவர்களது இந்த முயற்ச்சி மனதார பாராட்டப்படவேண்டியதுதான்).


ஒழுங்கான தொடர்பாடலின் காரணமாக எம்மை வரவேற்பதற்கு   சகல ஆயத்தங்களுடனையே அப் பாடசாலை ஆசிரியர்கள் காத்திருந்தனர், பாடசாலைக்குள் சென்றவுடன் எம்மை இன்முகத்துடன் வரவேற்ற ஆசிரியர்களுடன்  தேநீர் மற்றும் சிற்றுண்டியுடன் ஒரு சிறு சந்திப்பு நடைபெற்றது,  அவர்களுடனான கலந்துரையாடலிருந்து அவர்கள் எதிர்நோக்கி வருகின்ற கற்பித்தல் தொடர்பான சிரமங்களும் பிற நடைமுறைச்சிக்கல்களும் தெளிவாக விளங்கிற்று, இணையத்தில் இணைவதற்கான வாய்ப்புக்கள் முற்றிலும் இல்லாத நிலை இதற்கு சிறந்த உதாரணம் எனலாம், தெற்கில் இடம்பெறும் பாடவிதான மாற்றங்களும் அது தொடர்பான சுற்று நிருபங்களும் இங்குள்ள ஆசிரியர்களுக்கு சில சமயங்களில் காலம் தாழ்த்தியே கிடைக்கிறது பல சமயங்களில் கிடைப்பதே இல்லையாம், இந்த நிலைமையை பார்க்கும்போது பெயர் தெரியாத ஒருவர் சொன்ன கீழ்க்கண்ட வரிகள் புத்திக்கு வருகிறது "ஒரு சமூகத்தினை அழிப்பதற்கு முதலில் அங்குள்ள கல்வியாளர்களையும் கற்றல் ஏதுகைகளையும் அழிப்பதிலிருந்து தொடங்கவேண்டும் ".

ஆசிரியர்களுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு பாடசாலை மண்டபத்தில் எம்மை எதிர்பார்த்திருந்த மாணவர்களை காண்பதற்காக விரைந்தோம், அங்கும் எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் தான் எம்மை மேடையேற்றி தலைமை ஆசிரியர்களுடன் அமர வைத்தனர், இது எனக்கு முதன்முறை ஆகையால் சற்று பதட்டத்துடன் அமர்ந்திருந்தேன், ஆசிரியரொருவரின் வரவேற்புரையைத் தொடர்ந்து எமது பிரச்சாரபீரங்கி தனக்கேயுரிய நிதானமான அதேசமயம் ஆழமான உரையில் நாம் இங்கு வந்திருப்பதற்கான நோக்கம் குறித்தும் இதனை எவ்வாறு நீண்டகாலத்திற்கு கொண்டுசெல்லபோகிறோம் என்று விளக்கினார், அவரைத்தொடர்ந்து குழுவின் முக்கிய உறுப்பினர் தனது பேச்சைதொடர்ந்தார் இவரது பாணி மிகவும் தோழமையுடனும் மாணவர்களிடம் இடையிடையே  கேள்விகள் கேட்டு அவர்களை உற்சாகப் படுதியபடியும்  அவர்களுக்கு காணப்படுகின்ற  கற்றல் சார்ந்த பிரச்சினைகளை  எம்மிடம் கூறுமிடத்து எம்மாலான உதவிகள் அனைத்தையும் சிரமம் பாராமல் செய்யமுடியுமெனவும் எமக்காக நாம் என்று தொனிப்பட இந்த முயற்சி மென்மேலும் முன்னெடுக்கப்படுமெனவும்   கூறி முடித்தார். இறுதியாக நான் சற்றும் எதிர்பார்த்திராதவகையில்  கொழும்பிலிருந்து  அவர்களால் சேகரிக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட கற்றல் உபகரணங்களை  தலைமை ஆசிரியரிடம் உத்தியோகபூர்வமாக வழங்கும்படி கேட்டுகொண்டனர் இது அவர்களின் உயர்ந்த மனப்பாங்கினை எடுத்துக்காட்டியதோடு  இவ்வாறன சேவைகளில் மேலும் பங்குபெற வேண்டுமெனவும் தூண்டிற்று.

இந்த
கூட்டத்தின் பின்னர் சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களை குழுக்களாக பிரித்து அவர்களுக்கு புத்திமதிகளையும் ஊக்கத்தினையும்  கொடுப்பதற்கான  வாய்ப்பும் கிட்டியது, இதுவும் முதல் அனுபவமாகையால் சற்று தயக்கமாகத்தான் இருந்தது எனினும் இம்மாணவர்களை எவ்வாறாவது நல்வழிப்படுத்தி  கல்விகளில் முன்னேற்றமடையச்செய்யவேண்டும்  எண்ணம் தோன்ற அவர்கள் மத்தியில் உற்சாகமாக உரையாடினேன், இவர்களை கூட வந்திருந்த மற்றைய அண்ணன்மார்களின் கவனத்தில் விட்டு உயர்தர மாணவர்களுக்கான வகுப்பறைக்குச்சென்றேன்.

அங்கு உயர்தர மாணாக்கருடன் ராகேஷ் அண்ணா மிகச் சகஜமாக பேசிகொண்டிருந்தது அவர்கள் இடையிடையே எழுப்பிய சிரிப்பொலியிலிருந்து விளங்கிற்று, அவர் உயர் கல்வியின் முக்கியத்துவமும், பல்கலைக்கழகங்களின் பங்கும் என்று தலைப்புப்பட பேசிமுடித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய சுதா அண்ணா சற்று உணர்ச்சி மேலிட கடந்த கால வடுக்களிலிருந்து விடுபடவும், தற்போது இருக்கின்ற இன்னல்களிருந்து வெளிவரவும் கல்விதான் உங்களுக்கு இருக்கும் ஒரே துடுப்பு என்று கூறி எமது இந்த பணிக்கு பிரதியுபகாரமாக உங்களது பெறுபேறுகளில் முன்னேற்றங்களைக் காட்டுங்கள் என்று கேட்டுகொண்டு, எனக்கு பேசுவதற்கு வழிவிட்டார் நான் கூற இருந்ததை வழமைபோலவே முன் வந்தவர்கள் பேசினபடியால் உயர்தர பரீட்சைக்கு நீங்கள் எவ்வாறு ஆயத்தம் பெற வேண்டுமெனவும், இருக்கின்ற வளங்களை எப்படி உபயோகித்துக்கொள்ள வேண்டுமெனவும் கூறி இங்கு வந்துள்ள அண்ணன்மார்கள் உங்களுக்காக ஒரு கருதரங்கையும்  கூடிய விரைவில் செய்வார்கள் என்று சுதா அண்ணாவின் தலையில் மேலும் பொறுப்பை போட்டு தவா அண்ணா தொடர்வாரென்று கூறிமுடித்தேன்.  அவரும் தனக்கேயுரிய பாணியில் வாழ்கையில் கல்வி எவ்வாறு முக்கியப்படுகிறது எனவும் அது இல்லாதவர்கள் சமூக,உள,நிதி ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒரு சில உதாரணங்களுடன் மாணவர்களுக்கு நன்கு உறைக்கும் வண்ணம் கூறிமுடித்தார்.


இறுதியாக மாணவர்களிடமிருந்து விடைபெற்று ஆசிரியர்கள் எமக்களித்த மதியயுணவையும்  பெற்றுக்கொண்டு 2 மணியளவில் பாடசாலையிலிருந்து விடைபெற்றோம், வரும் வழியில் குளியல் போடுவதற்காக குளங்களை தேடி கிடைக்காமையினால்  நேராக இரணைமடு குளக்கட்டுக்கே  சென்றுவிட அங்கு காவலாளிகளுக்கு மத்தியில் உடைந்துவிட்ட குளம் பாழடைந்து காட்சிகொடுத்தது,  மேலும் டிரோஷன் சொன்ன தமிழர் வரலாற்று முக்கியதுவமுடைய நிகழ்வொன்று இங்குதான் சர்வதேச செய்தி நிறுவனங்களும் படம்பிடிக்க நிகழ்ந்தது என்பதைக் கேட்கும் போது மீண்டு காலம்தான் பதில் சொல்லும் என சில வருடங்கள் பின்னோக்கி சென்ற மனதைப் திருப்திபடுத்தினேன், அத்துடன் அதுபற்றி டிரோஷன் சொல்லக்கேட்டது ஆச்சரியம்தான் (என்ன இருந்தாலும் அவனும் தமிழன்தானே).


பின்னர் 6 .30 மணியளவில் வவுனியா வந்து மீண்டும் டிரோ வீட்டில் குளியல் மற்றும், இரவுணவை முடித்துக்கொண்டு இரவு பத்துமணியளவில் பஸ் ஏறி அடுத்த நாள் காலை 4 மணிக்கு கொழும்பையடைந்தோம். தொலைத்து இரு இரவு நித்திரையெனினும் இனிவரும் இரவுகளின் நித்திரை சென்ற பயணத்தின் திருப்தியையும் மனநிறைவையும் நித்தம் தருமென்றால் அது மிகையில்லை.:)


இந்த பயணக்குறிப்பு ஒரு வரலாற்று பதிவாக என்னுடன் இருக்கவேண்டுமென்ற காரணத்திற்காக இங்கு பதிவிடுகிறேன். நன்றி .:)

No comments:

Post a Comment